வருண் சக்ரவர்த்தி ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் - முரளி விஜய்!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் இந்திய அணி ஏற்கெனவே கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பை நழுவவிட்டதால், இம்முறை கோப்பையை வென்று அசததும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தின் இருக்கும் ஃபார்மில் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஏனெனில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள வருண் சக்ரவர்த்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான அறிமுக சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியும் அசத்திருந்தார். இதன் காரணமாகவே இறுதிப்போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், வருண் சக்ரவர்த்தி உலகத்தரம் வாய்ந்த வீரர் என முன்னாள் இந்திய வீரர் முரளி விஜய் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “வருண் சக்ரவர்த்தி ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளராக மாறும் தருவாயில் இருக்கிறார். ஏனெனில் அவர் கேரம் பந்துகள் மற்றும் ஃபிளிப்பர்களை என மிகவும் அரிதான திறனை கொண்டுள்ளார்.
அதுமட்டுமின்றி அதனை செய்யும் போது அவர் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது, பார்க்க அருமையாக இருக்கிறது. அவர் என் மாநிலத்திலிருந்து வருகிறார், இந்திய அணி நிறைய திறமையாளர்களால் நிரப்பப்பட்டுள்ளது என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் அணி பல ஆண்டுகளாக ஒரு சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது, மேலும் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மிலும், ஃபிட்டாகவும் இருக்கிறார்கள்” என்று பாராட்டியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய அணிக்காக கடந்த 2021ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான வருண் சக்ரவர்த்திக்கும், சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து ஒருநாள் தொடரின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள வருண் சக்ரவர்த்தி இதுவரை 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் ஒருமுறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.