நான் பந்துவீசியதில் இவர்கள் தான் பெரிய சவாலை கொடுத்தனர் - நாதன் லையன்!
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 28 வருடங்களாக தங்களுடைய சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் அந்த அணி தொடர்ந்து 16 போட்டிகளில் வென்று மிகப்பெரிய சவாலையும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் கொடுத்து வருகிறது.
இந்த தொடரின் 2ஆவது போட்டியில் நட்சத்திர வீரர் நாதன் லையன் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எடுத்த 3ஆவது ஆஸ்திரேலிய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தின் பராமரிப்பாளராக இருந்த அவர் கிரிக்கெட்டின் மீதான ஈர்ப்பால் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி பின்னர் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.
அதில் சுழலுக்கு சாதகமற்ற ஆஸ்திரேலிய மைதானங்களில் ஜாம்பவான் ஷேன் வார்னே இடத்தை நிரப்பும் அளவுக்கு மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் கடந்த 10 வருடங்களாக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் தற்போது முத்தையா முரளிதரனுக்கு பின் 500 விக்கெட்டுகள் எடுத்த 2ஆவது ஆஃப் ஸ்பின்னர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்நிலையில் தம்முடைய கேரியரிலேயே இந்தியாவின் ஆல் டைம் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்,விராட் கோலி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் பெரிய சவாலை கொடுத்ததாக நாதன் லையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் விளையாடியதில் சிறந்த எதிரணி வீரர் யார் என்ற கேள்வி மிகவும் கடினமானது. சில ஜாம்பவான்களுக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன்.
அதிலிருந்து உங்களுக்கு 3 பெயர்களை தருகிறேன். அவர்கள் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ். அவர்களுடைய தடுப்பாட்டத்திற்கு எதிராக நான் நீண்ட நேரம் சவாலை கொடுக்க முயற்சித்ததே அவர்களை அவுட்டாக்கியதன் பின்னணியில் இருக்கும் ரகசியமாகும்” என்று தெரிவித்டத்ளளார்.
முன்னதாக 23 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை 7 முறை அவுட்டாக்கியுள்ள நாதன் லையன், சச்சின் டெண்டுல்கரை 6 போட்டிகளில் எதிர்கொண்டு 4 போட்டிகளில் அவுட்டாக்கியுள்ளார். அதே போல 12 இன்னிங்ஸ்களில் ஏபி டீ வில்லியர்ஸை அவர் 2 முறை மட்டுமே அவுட்டாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.