விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்திருந்த கர்நாடகா மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் மற்றுன் நிகின் ஜோஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். இதில் நிகின் ஜோஸ் 37 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அனீஷ் கேவி-யும் 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் மயங்க் அகர்வாலுடன் இணைந்த ஸ்மாறன் ரவிச்சந்திரனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. 

Advertisement

இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயங்க் அகர்வால் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்த ஸ்மாறனும் அரைசதம் கடந்தார். பின் 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 124 ரன்களைச் சேர்த்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழக்க, மறுபக்கம் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 83 ரன்களை எடுத்திருந்த ஸ்மாறனும் விக்கெட்டை இழந்தார். இதனால் கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்களை குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் மிலிந்த் குமார் 3 விக்கெட்டுகளையும், அன்கித் ரெட்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் ரோஹித் ராயுடு முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த தன்மய் அகர்வால் மற்றும் கேப்டன் திலக் வர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தன்மய் அகர்வால் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கொடிமேலா ஹிம்தேஜா 15 ரன்களிலும், நிதிஷ் ரெட்டி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் திலக் வர்மாவுடன் இணைந்த ஏல்கனி வருண் கௌத் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

இப்போட்டியில் சதத்தை நெருங்கிய கேப்டன் திலக் வர்மா 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 99 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வருண் கௌத் சதமடித்து அசத்தியதுடன் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 109 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஹைதராபாத் அணி 49.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகா அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News