இதனை மிகப்பெரும் வெற்றியாக கருதுகிறேன் - ரோஹித் சர்மா!

Updated: Thu, Jan 04 2024 20:18 IST
இதனை மிகப்பெரும் வெற்றியாக கருதுகிறேன் - ரோஹித் சர்மா! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “இது ஒரு மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். முதல் டெஸ்டில் நாங்கள் தோல்வி அடைந்தும் அதிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். தற்போது இரண்டாவது டெஸ்டில் எங்களுடைய பவுலர்கள் பிரமாதமாக செயல்பட்டார்கள். எங்களுடைய வீரர்கள் பல பிளான்களை போட்டு அதற்கான பரிசுகளை தற்போது பெற்றிருக்கிறார்கள்.

எங்களை நம்பி நாங்கள் விளையாடினோம். முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற நினைத்தோம். ஆனால் கடைசி ஆறு விக்கெட் இழந்த விதம் நிச்சயம் வருத்தத்தை கொடுத்தது. இந்த போட்டி மிகவும் குறுகிய போட்டியாக தான் இருக்கும் என நினைத்தோம். இதனால் ஒவ்வொரு இன்னிங்சும் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தோம். இந்த போட்டியில் முன்னிலை பெறுவது என்பது மிகவும் முக்கியமாக இருந்தது.

சிராஜ் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் செயல்பட்ட விதம் ஸ்பெஷலானது. இதை நாம் தினம் தினம் பார்க்க முடியாது. நாங்கள் இந்த போட்டியை சிம்பிளாக தான் எதிர்கொண்டோம். ஆடுகளமும் எங்களுக்கு நன்றாக ஒத்துழைத்தது. எங்களுடைய பவுலர்கள் சிராஜ், பும்ரா, முகேஷ் மற்றும் பிரசித் கிருஷ்ணா என அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தென் ஆப்பிரிக்காவுக்கு யார் வந்தாலும் இது கடும் சவால்களை கொடுக்கும் ஆடுகளமாக இருக்கிறது. இந்தியாவுக்கு வெளியே தற்போது நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். இதனை நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த தொடரை நாங்கள் வென்று இருக்க முயற்சி செய்தோம். ஆனால் தென் ஆப்பிரிக்கா உண்மையிலேயே சிறந்த அணி.

அவர்கள் கடும் சவால்களை எங்களுக்கு கொடுத்தார்கள். ஒரு நல்ல அணியை எதிர்கொண்டு தொடரை சமன் செய்தது திருப்தி அளிக்கிறது. டீன் ஏல்கார் தென் ஆப்பிரிக்க அணியின் மிக முக்கியமான வீரராக இருந்தார். அவருடைய ஓய்வு வாழ்க்கை சிறந்ததாக அமைய நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை