ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து நாங்கள் கில்லை முடிவு செய்ய மாட்டோம் - விக்ரம் ரத்தோர்!

Updated: Mon, Jul 17 2023 14:40 IST
ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து நாங்கள் கில்லை முடிவு செய்ய மாட்டோம் - விக்ரம் ரத்தோர்! (Image Source: Google)

இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தற்பொழுது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் மூன்று நாட்களில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களம் கண்ட இளம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 171 ரன்கள் குவித்து அசத்தினார். தன்னை தொடக்க வீரர் இடத்தில் இருந்து மூன்றாவது வீரராக தானே கீழே இறக்கிக் கொண்ட இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

தற்பொழுது இவர்கள் இருவர் குறித்தும் பேசியுள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், “ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து நாங்கள் கில்லை முடிவு செய்ய மாட்டோம். அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. அவரால் அணிக்கு மிக நன்றாக செயல்பட முடியும். ஏனென்றால் அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. அவர் தனது நேரத்தை எடுத்து விளையாடலாம். அவர் ஒரு ஸ்ட்ரோக் பிளேயர். ஆட்டத்தை முன்னோக்கி நகர்த்தக்கூடியவர். அப்படிப்பட்ட ஒருவர் பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருப்பது அணிக்கு நல்ல விஷயம்.

அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் எடுத்துள்ளார். சில நேரங்களில் சில கிரிக்கெட் வடிவங்களில் ரன்கள் வருவதற்கு கொஞ்சம் நேரம் ஆகலாம். அவருக்கு நேரம் இருக்கிறது. அவர் நேரத்தை எடுத்துக் கொள்கிறார். அவரிடம் இருக்கும் திறமை குறித்து எந்த சந்தேகமும் இல்லை. அவர் இந்திய அணியின் எதிர்காலம். அவர் நீண்ட காலம் விளையாடுவார்.

அவரிடம் ரன்கள் இந்த வடிவத்தில் இப்பொழுது பெரிதாக வருவதற்கு நேரம் எடுத்துக் கொண்டாலும், அவரிடம் இருக்கும் ஒரு நல்ல விஷயம் அவர் மிக மிக கடினமாக உழைக்கிறார். அவர் விஷயங்களில் வேலை செய்கிறார். மேலும் ஆற்றலுடன் அவருக்கு நல்ல மன உறுதியும் இருக்கிறது. இது ஒருவரை பெரிய வீரர் ஆக்குகிறது. மீண்டும் சொல்கிறேன் சந்தேகத்திற்கு இடமில்லாமல் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அவர் நீண்ட காலம் விளையாடுவார்.

இங்கே தொடக்க ஆட்டக்காரர்கள் மூன்று பேர் இருக்கிறார்கள். யாராவது ஒருவர் மூன்றாவது இடத்தில் விளையாடி தான் ஆக வேண்டும். இந்த நிலையில் கில் தாமாக வந்து மூன்றாவது இடத்தில் விளையாட கேட்டது மிகவும் நல்ல விஷயமாக அமைந்தது. மேலும் அவர் உள்நாட்டு போட்டிகளில் மூன்று மற்றும் நான்காம் இடங்களில்தான் இந்த கிரிக்கெட் வடிவத்தில் விளையாடி வந்திருக்கிறார். இது தமக்கு சரியான இடமாக இருக்கும் என்று அவர் உணர்ந்திருக்கிறார். அவர் கேட்ட பிறகு டிராவிட் உடனான அவரது உரையாடல் முடிவில், அவர் மூன்றாம் இடத்தில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டது. அந்த முடிவில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.

ஜெய்ஸ்வால் பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் இரண்டாம் நாளில் அவர் மதிய உணவுக்கு முன் 90 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார். அவருடைய இன்னிங்ஸில் இதுதான் சிறப்பம்சமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். இது அவருடைய நிஜமான கேரக்டருக்கு எதிராக இருந்தது. அவரது இயல்பான ஆட்டத்தை விட்டு கடினமான சூழ்நிலையை கடந்து பெரிய ரன்களை நோக்கி சென்றார்.

அவர் நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாடுவார். அவரிடம் சிறந்த ஆற்றல் மற்றும் சிறந்த எதிர்காலம் இந்திய அணியில் அவருக்காக இருக்கிறது. நான் இதற்கு முன் தேர்வு குழுவில் இருந்தேன். ஒரு வீரரை தேர்ந்தெடுக்கும் பொழுது அவர் 10 ஆண்டுகள் இந்திய அணிக்கு விளையாடுவாரா? என்று பார்க்க வேண்டும். இவருக்கு அப்படியான திறமைகள் இருக்கிறது.

நான் இதுவரை இவருடன் சேர்ந்து பணியாற்றியது இல்லை. ஐபிஎல் தொடரில் அவர் ரன் குவித்ததை நான் பார்த்திருக்கிறேன். அவர் எவ்வளவு சுறுசுறுப்பான பிளேயர், எவ்வளவு பெரிய ஸ்ட்ரோக் பிளேயர் என்பதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவர் அனிக்காக சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தனது ஆட்டத்தை மாற்றிக் கொண்டார். இது அவருடைய சிறப்பான குணம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை