ஐபிஎல் 2023: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழங்கிய முக்கிய விருதுகள்!

Updated: Mon, Feb 20 2023 20:51 IST
Image Source: Google

உலகளவில் அதிக புகழ் கொண்ட விளையாட்டு தொடர்களில் ஐபிஎல்-க்கு முக்கிய இடம் உண்டு. ஐபிஎல் தொடர்களை பார்த்து அனைத்து நாடுகளும் இன்று தங்களது உள்நாட்டு தொடர்களை நடத்தி வருகின்றனர். இன்று ஐபிஎல் தொடரின் மதிப்பு பல்லாயிரம் கோடிகளை தாண்டி சென்றுக்கொண்டுள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட் கேலண்டர்களில் ஐபிஎல்-க்கென தனி இடத்தை கேட்டு பெறும் அளவிற்கு பிசிசிஐ உயர்ந்துள்ளது.

இப்படிபட்ட ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 20ஆம் தேதியன்று தான் தொடங்கப்பட்டது. இந்த முறை 16வது சீசன் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதற்கான அட்டவணையை தான் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி வரும் மார்ச் 31ஆம் தேதி போட்டிகள் தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமே பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இந்த 15 ஆண்டு கால சாதனையை கொண்டாட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், Incredible Premier League awards என்ற பெயரில் விருதுகளை வழங்கியுள்ளது. அதன்படி சிறந்த கேப்டனாக மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா தேர்வாகியுள்ளார். 5 முறை கோப்பையை வென்றுக்கொடுத்ததால் தோனியை முந்தி ரோஹித் இந்த பெற்றிருக்கிறார். 

சிறந்த பேட்டருக்கான விருது ஏபி.டிவில்லியர்ஸுக்கு தரப்பட்டுள்ளது. ஆர்சிபி அணிக்காக அவர் விளையாடிய சிறப்பான இன்னிங்ஸை கருத்தில் கொண்டு தந்துள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக பட்டியலில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிறந்த பந்துவீச்சாளராக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரு சீசனில் சிறப்பாக செயல்பட்ட பேட்ஸ்மேனாக விராட் கோலி தேர்வாகியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் விராட் கோலி 973 ரன்களை விளாசினார். இதில் 4 சதங்களும் அடங்கும். ஒரே சீசனில் சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளராக சுனில் நரேன் தேர்வாகியுள்ளார். 2012ஆம் ஆண்டு சுனில் நரேன் அறிமுகமான முதல் சீசனிலேயே 15 இன்னிங்ஸ்களில் 24 விக்கெட்களை அள்ளினார். இதனால் கொல்கத்தா தனது முதல் கோப்பையை வென்றது.

ஒட்டுமொத்தமாக சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் என்ற விருதை வெஸ்ட் இண்டீஸுன் ஆண்ட்ரே ரஸலுக்கு அறிவித்துள்ளனர். கொலக்த்தா அணிக்காக அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் ஷேன் வாட்சன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் புள்ளிகள் வித்தியாசத்தில் ரஸல் தட்டிச்சென்றுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::