ஷாருக் கானுடன் இணைந்து நடனமாடிய விராட் கோலி!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான 9வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி ஷர்துல் தாகூர் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 17.4 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
சொந்த மண்ணில் 4 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய கொல்கத்தா, வலிமையான அணியாக காணப்பட்ட ஆர்சிபியை வீழ்த்தியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்தது. பேட்டிங்கின் ஷர்துல் தாகூர் அதிரடி காட்ட, பந்துவீச்சில் கேகேஆர் அணியின் சுழல் வியூகத்தில் இருந்து வெளிவர முடியாமல் ஆர்சிபி அணி தவித்தது.
ஆர்சிபி அணியின் 9 விக்கெட்டுகளை கேகேஆர் சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து ஆட்டநாயகனாக ஷர்துல் தாகூர் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் இந்தப் போட்டியை நேரில் காண கேகேஆர் அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாரூக் கான், அவரது மகன் சுஹானா கான், நடிகை ஜூஹி சாவ்லா உள்ளிட்டோர் வந்திருந்தனர். இதனால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானமே அதிக கொண்டாட்டத்துடன் இருந்தது.
இந்தப் போட்டிக்கு பின் கேகேஆர் அணி வீரர்களை சந்தித்து ஷாரூக் கான் வாழ்த்து கூறினார். அதேபோல் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியையும் சந்தித்தார். அப்போது ஷாரூக் கான் - விராட் கோலி இருவரும், "ஜோமி ஜொ பதான்" என்ற ஹிந்தி பாடலுக்கு மைதானத்திலேயே குத்தாட்டம் போட்டனர். இந்தியாவின் இரு பெரும் துறைகளின் நட்சத்திரங்கள் மைதானத்தில் நடனமாடியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.