சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் - ரவி சாஸ்திரி!

Updated: Thu, Nov 16 2023 21:06 IST
Image Source: Google

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 80 சதங்களை விளாசி இருக்கிறார் விராட் கோலி.

ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதங்கள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என்று 80 சதங்களை அடித்துள்ளார். இதனால் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு விராட் கோலிக்கு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விராட் கோலியின் சதம் பற்றி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களை விளாசிய போது யாராவது அவரின் சாதனையை முறியடிப்பார்கள் என்று நினைத்தோமா.. இதோ விராட் கோலி 80 சதங்களை விளாசி இருக்கிறார். அதில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 50 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலியை போன்ற வீரர்கள் முடியாதது என்று எதுவும் கிடையாது.

அவரை போன்ற வீரர்கள் ரன்கள் சேர்க்க தொடங்கிவிட்டால், அவர்களை கட்டுப்படுத்துவது சாதாரணம் கிடையாது. நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், அடுத்த 10 இன்னிங்ஸ்களில் விராட் கோலி குறைந்தது 5 சதங்களையாவது விளாசுவார். கிரிக்கெட்டில் 3 வடிவங்கள் உள்ளது. அந்த 3 வடிவங்களிலும் விராட் கோலி விளையாடி வருகிறார். அவரிடம் இன்னும் 3 முதல் 4 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் உள்ளது.

அதேபோல் விராட் கோலியின் சிறப்பே அவர் ரன்களை ஓடி எடுப்பது தான். இதனால் அவர் பவுண்டரி, சிக்சரை அடிக்கவே தேவையில்லை. அவரால் ஓடியே ரன்களை குவிக்க முடியும். அதுவே அவர் மீதான அழுத்தங்களை குறைக்கிறது. அவரால் பவுண்டரிகளை அடிக்க முடியாத போது, ஓடி ரன்களை எடுத்துவிட்டு, கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அதனை சமன் செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை