வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!

Updated: Wed, Sep 11 2024 20:07 IST
Image Source: Google

வங்கதேச அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பான சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய விராட் கோலி, அதன்பின் தனிப்பட்ட காரணங்களினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து அவர் எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கம்பேக் கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விராட் கோலி படைக்கவுள்ள சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

27000 சர்வதேச ரன்கள்

இந்த போட்டியில் விராட் கோலி 58 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை நிறைவு செய்வார். இதுவரை, 553 போட்டிகளில் 591 இன்னிங்ஸ்களில் என மூன்று வடிவங்களையும் சேர்த்து விராட் கோலி 26,942 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி இந்த மைல் கல்லை எட்டும் பட்சத்தில் சர்வதேச அளவில் 27,000 ரன்களை  அதிவேகமாக கடந்த வீரர் எனும் சாதனையைப் படைப்பார்.  மேற்கொண்டு இந்த மைல் கல்லை எட்டும் நான்காவது சர்வதேச கிரிக்கெட் வீரர் எனும் பெருமையையும் அவர் பெறுவார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர். 

9000 டெஸ்ட் ரன்கள்

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை எடுக்க மேலும் 152 ரன்கள் தேவை. இதுவரை 113 டெஸ்டில் 191 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி இதுவரை 8,848 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 29 சதங்கள் மற்றும் 30 அரைசதங்களும் அடங்கும். இந்நிலையில் இப்போட்டியில் அவர் 9000 ரன்களை கடக்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக இந்த மைல் கல்லை எட்டிய 4ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். இதற்கு முன்பு இந்திய அணிக்காக இதுவரை சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் ஆகியோரால் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

30 டெஸ்ட் சதங்கள்

கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 29 சதங்களை அடித்துள்ளார். இந்த தொடரில் அவர் மேற்கொண்டு ஒரு சதம் அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மேத்யூ ஹைடன் மற்றும் ஷிவ்நாராயண் சந்தர்பால் ஆகியோருடன் இணைந்து 15ஆவது இடத்தை அடைவார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த் , துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை