விராட் கோலிக்கு அதிர்ஷ்டமில்லை - கிரேம் ஸ்வான்!
கடந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து - இந்தியா இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் ரிஷப் பந்த் – ரவீந்திர ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் சேர்த்துள்ளது.
இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 11 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் மேட்டி பாட்ஸ் பந்துவீச்சில் எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்ற பந்தை விக்கெட் கீப்பரிடம் விடுவதற்காக விராட் கோலி பேட்டைத் தூக்கினார். ஆனால் எதிர்பாராதவிதமாக பந்து உள்ளே எட்ஜ் ஆகி பேட்டில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இந்த இன்னிங்சிலும் சொதப்பியது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்த விதம் குறித்து பேசிய இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான், ''விராட் கோலி நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கினார். களத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு முயன்றுள்ளார். ஆனால் அவரை அவுட் செய்த பந்து இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டம்பை சாய்த்துள்ளது. விராட் கோலி ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே நகர முயன்றதை வீடியோவில் பார்க்க முடியும். என்னைக் கேட்டால் அவருக்கு இந்த முதல் இன்னிங்ஸில் அதிர்ஷ்டமில்லை என்றுதான் சொல்வேன்.
ஆனால் விராட் கோலி அதைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. அவர் களத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதுடன், ரன்கள் சேர்க்கவும் முயன்றார். மேலும் அவர் பெவிலியன் திரும்பியதும் பரிதாபத்துடன் காணப்பட்டார். நான் இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்'' என்று தெரிவித்தார்.