சச்சின் vs விராட்; யார் சிறந்தவர்? - பதிலளித்த கபில் தேவ்!

Updated: Sun, Jan 22 2023 15:37 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சமகாலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக பார்க்கப்பட்டு வருபவர் விராட் கோலி. இரண்டரை வருடங்களாக சதங்கள் அடிக்காமல் திணறி வந்த இவர், வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடரில் சதம் அடித்தார். அதைத் தொடர்ந்து இலங்கை அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் என, அடுத்தடுத்த தொடர்களில் சதங்கள் அடித்து மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியிருக்கிறார்.

தற்போது வரை 74 சர்வதேச சதங்களை விராட் கோலி அடித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை எட்டுவதற்கு இவருக்கு மட்டுமே வாய்ப்புகள் இருப்பதாகவும், சமகால கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான கிரிக்கெட் வீரர் எனவும் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்கிற விவாதங்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. பல முன்னாள் வீரர்களும் விமர்சனர்களும் வர்ணனையாளர்களும் இதற்காக தங்களது பதிலை கொடுத்து வருகின்றனர். இந்த கேள்வி சமீபத்தில் கபில் தேவ் முன்னர் வைக்கப்பட்டது. இதற்கு அவர் தனது சிறப்பான பதிலை கொடுத்திருக்கிறார். 

இதுகுறித்து பேசிய கபில் தேவ், “இருவருமே தலைசிறந்த வீரர்களுக்கான அத்தனை திறமைகளையும் படைத்தவர்கள். கிரிக்கெட் என்பது தனிப்பட்ட வீரரின் ஆட்டம் அல்ல ஒரு அணியாக செயல்படும் ஆட்டம். இருவரிடமும் எனக்கு பிடித்தது மற்றும் பிடிக்காதது என இரண்டுமே இருக்கிறது. அதேபோல் இரண்டு பேருமே ஒட்பிட்டு பேசக்கூடியவர்கள் அல்ல. இருவருமே அந்தந்த காலங்களில் சிறந்த வீரர்களாக விளங்கியவர்கள்.

எனது காலகட்டத்தில் கவாஸ்கர் தலைசிறந்த வீரராக இருந்தார். அதற்கு அடுத்த காலகட்டத்தில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, சேவாக் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக இருந்தனர். தற்போதைய காலகட்டத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் சிறப்பாக செயல்பட்டதால் தலைசிறந்த வீரர்களாக இருக்கின்றனர். அடுத்து வரும் காலகட்டங்களிலும் இதுபோன்ற வீரர்கள் வருவார்கள். தலைசிறந்த வீரர்களாக உருவாவார்கள். எந்த வகையில் ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட்டு பேச முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை