பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் - விராட் கோலியின் சகோதரர் வேண்டுகோள்!

Updated: Wed, Jan 31 2024 12:56 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.  இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விராட் கோலி விலகியுள்ளார்.

மேலும்,  விராட் கோலியின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அவரது தனிப்பட்ட காரணங்களின் தன்மை குறித்து ஊகங்களைத் தவிர்க்குமாறும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை பிசிசிஐ கேட்டுக்கொள்கிறது என குறிப்பிட்டிருந்தது. மேலும் விராட் கோலிக்கு மாற்றாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜத் பட்டிதார் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்தது.

இருப்பினும் ஒருசில ஊடகங்கள் விராட் கோலியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதன் காரணமாகவே விராட் கோலி இத்தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று செய்திகள் வெளியிட்டன. இந்நிலையில் தேவையில்லாத வதந்திகளை ஊடகங்களும், ரசிகர்களும் பரப்ப வேண்டாம் என்று விராட் கோலியின் சகோதரர் விகாஷ் கோலி வேண்டுகொள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து விகாஸ் கோலி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “எங்கள் அம்மாவின் உடல்நிலை குறித்து பொய்யான செய்திகள் பரவி வருவதை நான் கவனித்தேன். எங்கள் அம்மா முற்றிலும் நலமாக இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இது போன்ற செய்திகளை சரியான தகவல் இல்லாமல் பரப்ப வேண்டாம் என ரசிகர்கள் மற்றும் ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன். எங்கள் மீது அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி” என்று பதிவுசெய்துள்ளார். இவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை