ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!

Updated: Thu, May 09 2024 20:09 IST
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அப்படி முன்னேறும் நான்கு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் முன்னாள் சாம்பியன் இலங்கை அணியை இன்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது, அதன்படி 15 பேர் அடங்கிய இந்த அணியின் கேப்டனாக வநிந்து ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே வநிந்து ஹசரங்கா இலங்கை அணியை வழிநடத்திய நிலையில், காயம் காரணமாக அவர் வங்கதேசம் மற்றும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். 

இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள ஹசரங்கா மீண்டும் இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் சரித் அசலங்கா இலங்கை அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளர். மேலும் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸிற்கும் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை அணிக்காக 6ஆவது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 2014ஆம் ஆண்டு கோப்பையை வென்ற இலங்கை அணியிலும் ஏஞ்சலோ மேத்யூஸ் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்களைத் தவிர்த்து குசால் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ், முன்னாள் கேப்டன் தசுன் ஷனகா, தனஞ்செயா டி சில்வா, மஹீஷ் தீக்‌ஷனா, மதீஷா பதிரானா, துஷ்மந்தா சமீரா போன்ற நட்சத்திர வீரர்களுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. மேலும் விஜயகாந்த் வியாஸ்காந்த், அஷிதா ஃபெர்னாண்டோ, பனுகா ராஜபக்‌ஷா மற்றும் ஜனித் லியானகே ஆகியோரு ரிஸர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி: வனிந்து ஹசரங்க (கே), சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்செயா டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துனித் வெல்லலாகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, மதீஷா பதிரானா, மற்றும் தில்ஷன் மதுஷங்க.

ரிஸர்வ் வீரர்கள்: அஷித ஃபெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியானகே.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை