ஆட்டநாயகன் விருதை ஷிகர் தவானுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் - அஷுதோஷ் சர்மா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், தங்களுடைய சீசனையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ் 76 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 75 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 65 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது பங்கிற்கு 34 ரன்களையும், அறிமுக வீரர் விப்ராஜ் நிகாம் 39 ரன்களையும் சேர்க்க, இறுத்தியில் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஷுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 66 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த அஷுதோஷ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை வென்ற பிறகு பேசிய அஷுதோஷ் சர்மா, “கடந்த வருடத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டேன். முந்தைய சீசனில் ஓரிரு சந்தர்ப்பங்களில் ஆட்டத்தை முடிக்கத் தவறிவிட்டேன். ஆண்டு முழுவதும் நான் அதைப் பற்றி கவனம் செலுத்தியதுடன் இன்று அதனை செய்தும் காட்டியுள்ளேன்.
Also Read: Funding To Save Test Cricket
கடைசி ஓவர் வரை விளையாடினால் எதுவும் நடக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. மேலும் விப்ராஜ் நிகாம் அற்புதாமக விளையாடி எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தார். அதனால் நான் அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாட கூறினேன். அழுத்தத்தின் கீழ் அவர் மிகவும் அமைதியாக இருந்தார். மேற்கொண்டு இந்த விருதை எனது வழிகாட்டியான ஷிகர் தவானுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.