ஸ்மித் இடம்பெறாத பட்சத்தில் டிராவிஸ் ஹெட்டை கேப்டனாக நியமிக்க வேண்டும் - டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். இந்நிலையில் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் போது முழங்கையில் கயமடைந்ததார். இதனால் எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் இத்தொடரில் விளையாடவில்லை எனில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிராவிஸ் ஹெட்டை நியமிக்கலாம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய டேவிட் வார்னர், “காயம் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் இலங்கை சுற்றுப்பயணத்தைத் தவறவிட்டால், அது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும், ஆனால் அவர் அதிலிருந்து மீண்டு வருவார் என்று நான் நினைக்கிறேன்.
ஸ்மித் இத்தொடரில் விளையாடாத நிலையில் அணியின் கேப்டன் பொறுப்பிற்கு டிராவிஸ் ஹெட் சரியான தேர்வாக இருப்பார். மேலும் அவர் சௌத் ஆஸ்திரேலிய அணிக்காக பல ஆண்டுகளாக கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரிடன் சிறந்த தலைமை பண்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார். ஒருவேளை ஸ்மித் இத்தொடரில் விளையாடாமல் போனால் நிச்சயம் டிராவிஸ் ஹெட் தான் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னொலி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.