இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது - ஜோஸ் பட்லர்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனே நகரில் நடைபெற்ற போட்டியில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் 108 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதனைத்தொடர்ந்து 340 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றி பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து நாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், “இந்த வெற்றிக்காக தான் நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். இந்த போட்டியில் டேவிட் மலான் எங்களுக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார். அதன்பிறகு ஸ்டோக்ஸ் மற்றும் வோக்ஸ் விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது.
அவர்களது பார்ட்னர்ஷிப் எங்களை பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றது. ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வீரர் எப்பொழுதுமே மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர். அவர் கிறிஸ் வோக்ஸ் உடன் இணைந்து அமைத்த பார்ட்னர்ஷிப் எங்கள் அணியின் வெற்றிக்கு உதவியது. இந்த போட்டியில் அனைவருமே மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிந்தது என்று கூறியதால் பந்துவீச்சிலும் நாங்கள் சரியாக செயல்பட வேண்டியது அவசியம் என்று நினைத்தேன்.
அந்த வகையில் எங்களது பந்துவீச்சாளர்களும் இந்த போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம். எங்களது அணியில் கிரிஸ் வோக்ஸ் ஒரு மிகச் சிறப்பான வீரர் அவரால் பந்து வீசவும் முடியும் அதே போன்று பேட்டிங்கிலும் கைகொடுக்க முடியும். இந்த தொடர் ஒட்டுமொத்தமாகவே எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது” என கூறியுள்ளார்.