விராட் கோலியின் சர்ச்சை அவுட்; கவாஸ்கரின் விளக்கம்!

Updated: Sat, Feb 18 2023 21:28 IST
Was Virat Kohli Out Or Not Out Off Matthew Kuhnemann? Sunil Gavaskar Gives His Verdict (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 262 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய இந்திய அணி டாப் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. எனினும் கடைசி நேரத்தில் அக்‌ஷர் பட்டேல் - அஸ்வின் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 262 ரன்களுக்கு கொண்டு சென்றனர். இதனால் முதல் இன்னிங்ஸில் ஒரே ஒரு ரன் மட்டும் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி எந்தவொரு முன்னிலையும் பெறாமல் ஆல் அவுட்டானதற்கு காரணம் அம்பயரின் சர்ச்சை முடிவு தான் காரணம். சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 44 ரன்கள் அடித்திருந்த போது மேத்யூவ் குஹ்னெமேன் வீசிய பந்தை ஸ்ட்ரோக் வைக்க முயற்சித்தார். அப்போது அந்த பந்து கோலியின் பேடிற்கும், பேட்டிற்கும் இடையே ஒரே நேரத்தில் பட்டது. அதற்கு கள நடுவரும் அவுட் என காட்ட, 3ஆவது நடுவரும் ஆதாரம் தெளிவாக இல்லை எனக்கூறி நடுவர் காலாக கொடுத்துவிட்டார்.

நடுவரின் இந்த முடிவுக்கு இந்திய ரசிகர்கள் இது அநீதி என விமர்சித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாக் வரவேற்பு கொடுத்தார். அதில், அம்பயர்கள் இன்று மிக சரியான முடிவு எடுத்துள்ளதாக நினைக்கிறேன். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். பேட்டில் தான் அடித்தேன் என விராட் கோலி கூறுவார், ஆனால் அதனை ஏற்க கூடாது. இதுபோன்ற நிகழ்வுகளில் 10இல் ஒருமுறை பேட்ஸ்மேனுக்கு சாதகமாக தான் முடிவு வரும். இந்த முறை தான் நியாயமாக கொடுக்கப்பட்டுள்ளது. பால் டிராக்கிங்கில் பந்து ஸ்டம்புகளில் மோதுவது மிகவும் தெளிவாக காட்டப்பட்டுவிட்டது. எனவே இது அவுட் தான் எனக்கூறினார்.

இந்நிலையில் கவாஸ்கர் இதற்கு பதில் கொடுத்துள்ளார். அதில், “பந்து அப்போது ஸ்டம்பில் படுகிறதா இல்லையா என்பது பிரச்சினை கிடையாது. விராட் கோலி அதனை பேட்டில் அடித்தாரா இல்லையா? என்பது தான் பிரச்சினையே ஆகும். கள அம்பயரே கோலிக்கு அவுட் கொடுத்துவிட்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் 3ஆவது நடுவருக்கும் தெளிவான ஆதாரம் வேண்டும். அது தான் இங்கு இல்லாமல் போனது. இது துரதிஷ்டவசமானது” என கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 36.2.2 விதிமுறை சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஒரு பந்தானது பேட்ஸ்மேனின் பேடிலும் - பேட்டிலும் ஒரே நேரத்தில் பட்டால், அதனை பேட்டில் தான் முதலில் பட்டதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என ஐசிசியின் விதிமுறை கூறுகிறது. ஆனால் இது இன்று மீறப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை