AUS vs SA, 3rd Test: இரட்டை சதத்திற்காக காத்திருக்கும் கவாஜா; மழையால் மூன்றாம் நாள் ஆட்டம் ரத்து!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடந்து முடிந்த முதலிரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 10, மார்னஸ் லபுஷேன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். உஸ்மான் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 2ஆவது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது.
கவாஜாவுடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் இன்னிங்ஸை கட்டமைத்தார். கவாஜா 206 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் தனது 13-வது சதத்தை விளாசினார். அதேவேளையில் தனது 30அவது சதத்தை கடந்த ஸ்டீவ் ஸ்மித் 192 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
3ஆவது விக்கெட்டுக்கு கவாஜா, ஸ்மித் ஜோடி 377 பந்துகளில் 209 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய டிரெவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார். 59 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்த அவர், ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் இணைந்து டிரெவிஸ் ஹெட் 117 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்தார்.
நேற்றைய 2ஆவது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 131 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 475 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 368 பந்துகளில், ஒரு சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 195 ரன்களும், மேட் ரென்ஷா 5 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில், மழை காரணமாக தாமதமானது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இன்றைய நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக உஸ்மான் கவாஜா தனது முதல் இரட்டை சதத்தை அடிக்க மேலும் ஒருநாள் காத்திருக்க வேண்டியுள்ளது.