கேஎல் ராகுல் குறிப்பிடத்தக்க ஃபார்மில் இல்லை - வாசிம் ஜாஃபர்!

Updated: Sat, Jan 14 2023 13:59 IST
Wasim Jaffer on KL Rahul: 'He hasn't lived up to his expectations' (Image Source: Google)

கடந்த ஆண்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடுமையான விமர்சனத்துக்குள்ளான கேஎல் ராகுல், புதிய ஆண்டில் ஓரளவுக்கு ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தடுமாறிய நிலையில், கேஎல் ராகுலின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது. இதேபோல் தொடர்ந்து ராகுல் விளையாடும் பட்சத்தில் அவருக்கான இடம் ஊசலாடாமல் இருக்கும் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.

இன்னொரு பக்கம், சூரியகுமார் யாதவ் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும்நிலையில், கேஎல் ராகுல் சொதப்பும் போதெல்லாம் அவரது இடத்தில் சூர்யகுமார் யாதவ் பொருத்தமானவராக பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் கேஎல் ராகுலின் ஆட்டம் இனி ஆய்வுக்கு உட்பட்டதாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் ஜாஃபர் கூறுகையில், "சமீபகாலமாக கேஎல் ராகுல் குறிப்பிடத்தக்க ஃபார்மில் இல்லை. அவரது ஆட்டத்திறன் இனி ஆய்வுக்கு உட்பட்டதாகவே இருக்கும். சூர்யகுமார் யாதவ் வெளியே அமர்ந்திருப்பதால் ராகுலின் ஒவ்வொரு இன்னிங்ஸும் ஆராயப்படும். ராகுல் தொடர்ந்து தனது ஆட்டத் திறமையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். 

தவிர  ரிஷப் பந்த், சஞ்சு சாம்சனும் போட்டியில் இருக்கின்றனர். இனிவரும்  ஒவ்வொரு இன்னிங்ஸும் ராகுலுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். கேஎல் ராகுல் ஒரு கிளாஸ் பிளேயராக இருந்தாலும் அவரால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது பெரும் பிரச்சினையாக உள்ளது; அதில் எந்த சந்தேகமும் இல்லை. 

முக்கியமான போட்டிகளில் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அவர் ஆடாததும் முக்கிய விமர்சனமாக உள்ளது. ஆனால் அவர் தரமிக்க வீரர் என்பதால் பழைய நிலைக்கு திரும்புவார் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை