இந்திய அணியின் லெவனை கணித்த வசீம் ஜாஃபர்; பும்ராவுக்கு இடமில்லை!
IND vs ENG, 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ள வசீம் ஜாஃபர், அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியையும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும். இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தால் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதனால் இப்போட்டிக்கான பிளேயிங் லெவன் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஓவல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கணித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில் இந்திய அணியின் லேவனைத் தேர்வு செய்து அறிவித்துள்ளார். ஜாஃபர் தேர்வு செய்த இந்த அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் ஆகியோரையும், மூன்றாம் வரிசையில் சாய் சுதர்ஷனையும், நான்காம் வரிசையில் கேப்டன் ஷுப்மன் கில்லையும் தேர்ந்தெடுத்துள்ளார்.
அதேசமயம் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகிய ரிஷப் பந்திற்கு பதிலாக துருவ் ஜூரெலை அவர் தனது அணியில் இணைத்துள்ளார். மேலும் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆல் ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்கவைத்திருக்கும் அவர், கடந்த போட்டியில் விளையாடிய ஷர்தூல் தாக்கூருக்கு பதில், மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
இதுதவிர்த்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோருடன் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கும் வாய்ப்பு வழங்கியுள்ளார். இதன் காரணமாக அவர் கடந்த போட்டியில் விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அன்ஷுல் கம்போஜை லெவனில் இருந்து நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது இந்த அணியில் ஜெகதீசன், அபிமன்யூஸ் ஈஸ்வரன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாசீம் ஜாஃப்ர் தேர்வு செய்த இந்திய லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.