ரோஹித் சர்மாவை கவர்ந்த பதினோறு வயது சிறுவன்!
டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக அக்டோபர் ஐந்தாம் தேதி இந்திய அணி வீரர்கள் பெர்த் நகரில் வந்து அடைந்தனர். அங்கு டபிள்யூஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் முகாமிட்டு இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்திருப்பது தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் உள்ள அறைக்கு வந்து தங்களது உடைமைகளை வைத்துள்ளனர். அப்போது மைதானத்தில் ஏராளமான குழந்தைகள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை இந்திய வீரர்கள் பார்த்துள்ளனர்.அப்போது துருசில் செளகான் என்ற 11 வயது சிறுவன் மைதானத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
முதலில் அந்த சிறுவனை ரோகித் சர்மா தான் பார்த்துள்ளார். அந்த சிறுவன் தனது வயதையும் மீறி அதிவேகமாக பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்திருக்கிறார். குறிப்பாக இன்சுவிங் யாக்கர்களை சிறுவயதில் கற்றுக்கொண்டு அசத்திருக்கிறார். இதனைப் பார்த்து ரோகித் சர்மா அந்த சிறுவனை அழைத்து பாராட்டி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து தமக்கு வலை பயிற்சியில் பந்து வீசுமாறு அந்த சிறுவனை ரோகித் சர்மா அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆச்சரியத்தில் உறைந்த அந்த சிறுவன் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ரோகித் சர்மாவுக்கு பந்து வீசினார்.இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனிடம் பேசிய ரோஹித் சர்மா பெர்த்தில் நீ தங்கி இருக்கும் போது எப்படி இந்தியாவுக்காக நீ விளையாடப் போகிறாய் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அந்த சிறுவன் தான் இந்தியா வர இருப்பதாகவும் ஆனால் அங்கு எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை என்று கூறினார்.
இது குறித்து பேசிய அந்த சிறுவன் இந்திய வீரர்கள் மைதானத்திற்கு வரப் போகிறார்கள் என்று எங்களுக்கு முன்பே தெரியும். அவர்களை காண நான் ஆவலோடு இருந்தேன். அப்போது எனது தந்தை சொன்னார் நாளைக்கு நீ ரோகித் சர்மாவுக்கு கூட பந்து வீசலாம் என்று கூறினார். அப்போது நான் நம்பவில்லை. ஆனால் இன்று அது நிஜமாக நடந்து விட்டது என்று அந்த சிறுவன் கூறினார். 11 வயது சிறுவனுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீச ரோஹித் சர்மா வாய்ப்பு கொடுத்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.