கவுண்டி கிரிக்கெட்: மீண்டும் இரட்டை சதம் விளாசி மிராட்டிய புஜாரா!

Updated: Sun, May 01 2022 15:30 IST
Image Source: Google

இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் முக்கியமான தூணாகவும் திகழ்ந்தவர் புஜாரா. இந்தியாவிற்காக 95 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6713 ரன்களை குவித்தவர் புஜாரா.

இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த புஜாரா, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் திணறிவந்தார். இந்நிலையில், ரோஹித் சர்மா டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்றபின் நடந்த முதல் டெஸ்ட் தொடரான இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய 2 சீனியர் வீரர்களுமே புறக்கணிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் ரஹானே தற்போது ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் புஜாராவை ஐபிஎல் அணிகளும் ஏலத்தில் எடுக்காததால், இங்கிலாந்தில் நடந்துவரும் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிவருகிறார்.

இந்திய டெஸ்ட் அணியில் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க, கவுண்டியில் சிறப்பாக ஆடுவது ஒன்றே வழி என்பதை உணர்ந்து கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக அபாரமாக விளையாடி சதங்களை விளாசிவருகிறார். டெர்பிஷைர் அணிக்கு எதிராக ஏற்கனவே ஒரு இரட்டை சதமடித்திருந்த புஜாரா, இப்போது துர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி மற்றுமொரு இரட்டை சதம் அடித்தார்.

 

துர்ஹாம் அணிக்கு எதிராக 203 ரன்களை குவித்தார் புஜாரா. அவரது அபாரமான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 538 ரன்களை குவித்தது சசெக்ஸ் அணி. புஜாரா கவுண்டி கிரிக்கெட்டில் இரட்டை சதங்களாக விளாசி, இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெறுவதற்கான கதவை பலமாக தட்டிவருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஆடவுள்ள ஒரு டெஸ்ட் போட்டிக்கான அணியில் தனக்கான இடத்தை புறக்கணிக்க முடியாத வகையில் ஆடிவருகிறார் புஜாரா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை