பவுண்டரி எல்லையில் ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்திய ஃபெரீரா - வைரலாகும் காணொளி!

Updated: Mon, Jan 27 2025 12:40 IST
Image Source: Google

எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசனில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து டக் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

பின்னர் ஓரளவு தாக்குபிடித்து விளையாடியா டேவிட் பெடிங்ஹாம் 40 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 37 ரன்களையும், மார்கோ ஜான்சன் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஹார்டுஸ் வில்ஜோன் 4 விக்கெட்டுகளையும், லுதோ சிபம்லா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் அதிரடியாக விளையாடிய டெவான் கான்வே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெவான் கான்வே 11 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 76 ரன்களையும், விஹான் லூபே 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 14 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய லுதோ சிபம்லா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டோனொவன் ஃபேரீரா பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் இன்னிங்ஸின் 19ஆவது ஓவரில் ஃபெரீராவின் இந்த கேட்ச் காணப்பட்டது. அதன்படி சன்ரைசர்ஸ் அணிக்காக பேயர்ஸ் ஸ்வான்போயல் பேட்டிங் செய்து கொண்டிருந்தார், மறுபுறம் சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஹார்டுஸ் வில்ஜோன் பந்து வீச வந்தார். அந்த ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட ஸ்வான்போயல் மிட்-விக்கெட்டில் சிக்ஸர் அடிக்க முயன்று பந்தை தூக்கி அடித்தார். ஒருகணம் அந்த பந்து சிக்ஸருக்கு சென்றதாக பார்க்கப்பட்டது. 

 

Also Read: Funding To Save Test Cricket

ஆனால் அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த டோனொவன் ஃபெரீரா வேகமாக ஓடி வந்ததுடன் ஒற்றை கையில் பந்தை பிடித்து அசத்தினார். இதனை கண்ட அனைவரும் ஒருகணம் ஆச்சரியத்தில் உறைந்தனர். இதனால் ஸ்வான்போயல் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் டோனொவன் ஃபெரீரா பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி இணையாத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை