‘நீ நடிகன்டா..நடிகன்டா..’ - ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்திய குல்பதீன் - காணொளி!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியானது எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியில் ரஹ்மனுல்லார் குர்பாஸ் 43 ரன்களைச் சேர்த்தாலும் அதனை அடிக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்டார். மேற்கொண்டு விளையாடிய வீரர்களில் ரஷித் கானைத் தவிர்த்த மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்காத காரணத்தால் ஆஃப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை மட்டுமே எடுத்தது.
வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து வங்கதேச அணி 11.4 ஓவர்களில் இந்த இலக்கை எட்டினால் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற சூழலில் களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் மற்றும் தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் இரண்டாவது ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்த பந்திலேயே ஷாகிப் அல் ஹசனும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 12 ஓவரில் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் அந்த அணி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறாது என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும் ஒரு முனையில் லிட்டன் தாஸ் பொறுப்புடன் விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுமுனையில் இருந்த வீரர்கள் விக்கெட்டுகளை இழந்ததால் லிட்டன் தாஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. கடைசி வரை போராடிய லிட்டன் தாஸ் 5 பவுண்டரில் ஒரு சிக்ஸர் உள்பட 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் வங்காளதேச அணி 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் ரஷித் கான் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியானது 8 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவும் கலைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் குல்பதீன் நைப் செய்த செயல் ஒன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் வங்கதேச அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இன்னிங்ஸின் 11ஆவது ஓவரை ஆஃப்கான் தரப்பில் நூர் அஹ்மத் வீசினார். அந்த ஓவரின் 5ஆவது பந்தை அவர் வீச முன்வருகையில், மழை வருவதை கவனித்த ஆஃப்கான் அணி பயிற்சியாளர் ஜானதன் டிராட் வீரர்களை சிறுது நேரம் பந்துவீச்சாமல் தாமதப்படுத்துமாறு சிக்னலை கொடுக்க எந்த வீரரும் முதலில் அதனை கவனிக்கவில்லை.
ஆனால் கடைசியா ஸ்லீப் திசையில் நின்றுகொண்டிருந்த குல்பதீன் நைப், டிராட்டின் சிக்னலை கவனித்தவுடனே தசைபிடிப்பு ஏற்பட்டது போது மைதானத்து கிழே விழுந்து உருண்டார். இதனால் நடுவர் போட்டியை நிறுத்துடன் மழையும் வந்ததால் ஆட்டம் தமாதமானது. ஆனால் களத்தில் இருந்த பேட்டர்கள் முதற்கொண்டு குல்பதீன் நைபின் செயலைக் கண்டு சிரிப்பலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில் குல்பதீன் நைப் செய்த இந்த செயல் குறித்த காணொளியானது இணையத்தில் வைல்ராகி வருவது குறிப்பிடத்தக்கது.