வார்த்தை மோதலில் ஈடுபட்ட நிதீஷ் ரானா - ஆயூஷ் பதோனி; வைரலாகும் காணொளி!

Updated: Thu, Dec 12 2024 12:27 IST
Image Source: Google

சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற  இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய டெல்லி அணியில் பிரியன்ஷ் ஆர்யா 44 ரன்களையும், யாஷ் துல் 42 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நிலையில், இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுஜ் ராவத் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 73 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களைக் குவித்தது. 

இதனையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய உத்தர பிரதேச அணியில் பிரியம் கார்க் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 54 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் உத்தர பிரதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியின் போது உத்தரபிரதேச அணியின் நட்சத்திர வீரர் நிதீஷ் ரானா டெல்லி அணி கேப்டன் ஆயூஷ் பதோனியுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இப்போட்டியில் நிதீஷ் ரானா பந்துவீச்சை எதிர்கொண்ட அயூஷ் பதோனி அதில் லாங் ஆன் திசையில் அடித்துவிட்டு ரன் எடுக்க முயற்சித்தார். அப்போது நிதீஷ் ரானா நான் ஸ்டிரைக்கர் திசைக்கு சென்ற ஆயூஷ் பதோனியிடம் ஏதே கூறினார்.

 

இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராணாவும் பதோனியும் வார்த்தைப் போரில் ஈடுபட்டதால், கள நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். நிதிஷ் ராணா எப்போதும் ஆக்ரோஷமான ஆட்டக்காரர் என்பது, அவர் பலமுறை மைதானத்தில் மற்ற வீரர்களுடன் மோதுவதைப் பார்த்துள்ளோம். தற்போது, மீண்டும் அதே போல் அவர் களத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களை சற்று அதிருப்தியடைய செய்துள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

முன்னதாக நிதீஷ் ரானா மற்றும் அயூஷ் பதோனி இருவரும் டெல்லி அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளார். அதன்பின் நிதீஷ் ரானா டெல்லி அணியில் இருந்து விலகி தற்போது உத்தர பிரதேச அணிக்காக விளையாடி வரும் நிலையில், ஆயூஷ் பதோனி டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் அயூஷ் பதோனி லக்னோ அணிக்காகவும், நிதீஷ் ரானா ராஜஸ்தான் அணிக்காகவும் விளையாட ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை