ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் எங் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்ற மற்றொரு தொடக்க வீரர் ஃபின் ஆலனும் 12 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதே போல அடுத்ததாக வந்த கிறிஸ் பௌஸ் 14 ரன்னில் பெவிலியன் திரும்பியதால் 36/3 என ஆரம்பத்திலேயே நியூசிலாந்து தடுமாற்றமான துவக்கத்தை பெற்றது. இருப்பினும் அந்த சூழ்நிலையில் டாம் ப்ளண்டலுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடிய ஹென்றி நிக்கோலஸ் 49 ரன்கள் குவித்து சரிவை சரி செய்தார்.

Advertisement

அவருடன் மறுபுறம் சிறப்பாக விளையாடி நியூசிலாந்தை வலுப்படுத்திய டாம் பிளண்டல் 68 ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த ரச்சின் ரவீந்தரா 10, மெக்கொன்சி 20, ஜெமிசன் 20 என போன்ற வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 219/8 என நியூசிலாந்து தடுமாறிய போது கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ரன்களை எடுக்கும் நோக்கத்தில் பேட்டிங் செய்த இஷ் சோதி 46ஆவது ஓவரில், ஹசன் மஹ்முத் பந்தை வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார்.

அதை சரியாக கவனித்த மஹ்முத் உடனடியாக பந்து வீசுவதை நிறுத்தி மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அதனால் வங்கதேச அணியினர் அவுட் கேட்டதை தொடர்ந்து பெரிய திரையில் நடுவர்கள் சோதித்தனர். அப்போது பந்தை வீசுவதற்கு முன்பாகவே இஷ் சோதி வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறியதால் அவுட் என்று 3ஆவது நடுவர் தீர்ப்பு வழங்கினார்.

அதனால் இஷ் சோதி ஏமாற்றுத்துடன் பெவிலியனை நோக்கி நடக்க தொடங்கிய போது வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் பவுலர் மஹ்முத் ஆகியோர் நட்பு, நேர்மை தான் முக்கியமென தங்களுடைய முடிவை வாபஸ் பெறுவதாக சொன்னதுடன் அவரைத் தொடர்ந்து பேட்டிங் செய்யுமாறு அழைத்தனர். அதனால் நெகிழ்ந்து போன இஷ் சோதி பவுலர் ஹசன் மஹ்முத்தை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

 

Advertisement

ஏனெனில் உலகம் முழுவதிலும் பலமுறை இது போல மன்கட் செய்யப்படும் போதெல்லாம் இரு நாடுகளைச் சேர்ந்தவர்களும் காரசாரமாக மோதிக்கொள்வதே வழக்கமாகும். இருப்பினும் அதற்கு விதிவிலக்கான தங்கள் முடிவை வாபஸ் பெற்ற வங்கதேசம் அணியினரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News