கமிந்து மெண்டிஸை ரன் அவுட் செய்த மிட்செல் சான்ட்னார் - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 6 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 2 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 3 ரன்னிலும், கேப்டன் சரித் அசலங்கா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் இலங்கை அணி 23 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் ஜனித் லியானகே இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்கா ஃபெர்னாண்டோ தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
பின் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜனித் லியானகே தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 56 ரன்களைச் சேர்த்த நிலையில் அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் ஆட்டமிழந்தார். இறுதியில் விக்ரமசிங்கா 22 ரன்னிலும், வநிந்து ஹசரங்கா 35 ரன்களை சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இலங்கை அணி 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களில் ஆல் அவுட்டானது.
இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸை ரன் அவுட்டாக்கிய சம்பவம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன்படி 9அவது ஓவரின் கடைசி பந்தில் கமிந்து மெண்டிஸ் ஆஃப்சைடில் சிங்கிள் எடுக்க முயற்சித்த நிலையில், எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த மிட்செல் சான்ட்னர் பந்தை பிடித்ததுடன் அதனை த்ரோ அடித்து ஸ்டம்பை தகர்த்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமிந்து மெண்டிஸ் 3 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்த ரன் அவுட் ரசிகர்களுக்கு பழைய ஜான்டி ரோட்ஸின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது மற்றும் சான்ட்னர் ஏன் உலகின் சிறந்த பீல்டர்களில் ஒருவர் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டினார். இந்நிலையில் மிட்செல் சான்ட்னர் ரன் அவுட் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.