ஐபிஎல் 2023: நடராஜனின் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய தோனி; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி பேட்டர்கள் சிஎஸ்கேவின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டின் அபாரமான ஆட்டத்தினால் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதரபாத்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெவான் கான்வே 77 ரன்களைச் சேர்த்தார்.
இந்நிலையில் இப்போட்டி முடிந்த பின், ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன் தனது குடும்பத்துடன் தோனியை சந்தித்தார். அப்போது தோனி நடராஜனின் குழந்தையை கொஞ்சி விளையாடினார். அப்போது எனக்கு மகள் இருக்கிறாள் என்று தோனி சொல்லவே, தம்பி இல்லையா என்று நடராஜனின் மகள் கேட்க, இல்லை இவ்வளவு உயரத்தில் ஒரு மகள் இருக்கிறாள் என்று தோனி சைகையால் கூறினார்.
இந்த காணொளி தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடராஜன் தனது பள்ளிப்பருவ தோழியான பவித்ராவை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஹன்விகா என்ற பெண் குழந்தையுள்ளது குறிப்பிடத்தக்கது.