கேட்ச் பிடித்து அசத்திய கேஎல் ராகுல்; கைத்தட்டி பாராட்டிய சஞ்சீவ் கோயங்கா - வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற இரு அணிகளும் நிச்சயம் வெற்றிப்பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் - அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் அபிஷேக் போரலுடன் இணைந்த ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்த அபிஷேக் போரலும் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 111 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் அரைசதத்தை நெருங்கிய ஷாய் ஹோப் இன்னிங்ஸின் 9ஆவது ஓவரை வீசிய ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் பவுண்டரி அடிக்க முயற்சித்து கவர்ஸ் திசையில் தூக்கி அடித்தார். அப்போது அத்திசையில் இருந்த கேஎல் ராகுல் முதலில் பந்தை தவறவிட்டாலும், அதன்பின் டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் கேஎல் ராகுல் கேட்ச் பிடித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.