ஒரே ஓவரில் 32 ரன்களை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர் - காணொளி
Shimron Hetmyer Video: குளோபல் சூப்பர் லீக் டி20 தொடரில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷிம்ரான் ஹெட்மையர் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குளோபல் சூப்பர் லீக் டி20 தொடரானது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 16.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஃபேபியன் ஆலன் 28 ரன்களையும், முகமது நபி 21 ரன்களையும்ச் சேர்த்தார்.
கயானா அணி தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி, இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கயானா அணி தரப்பில் ஷிம்ரான் ஹெட்மையர் 39 ரன்களையும், மொயீன் அலி 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய ஷிம்ரான் ஹெட்மையர் 6 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். அதிலும் குறிப்பாக ஃபேபியன் ஆலனின் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசினார். அதன்படி இன்னிங்ஸின் 10ஆவது ஓவரை ஃபேபியன் ஆலன் வீசிய நிலையில் அந்த ஓவரை எதிர்கொண்ட ஷிம்ரான் ஹெட்மையர் முதல் நான்கு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி மிரட்டினார்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் ஓவரின் 5ஆவது பந்தில் இரண்டு ரன்களைச் சேர்த்த அவர், மீண்டும் கடைசி பந்தில் சிக்ஸரை விளாசினார். இதன்மூலம் அந்த ஒரே ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்களுடன் 32 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் இப்போட்டியில் அவர் 10 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 39 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியாக விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.