WC Qualifier: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனை குல் ஃபெரோசா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த முனீபா அலி - சித்ரா அமீன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் முனீபா அலி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அலியா ரியாஸ் 20 ரன்களுக்கும், ஒமைமா சோஹைல் 16 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய சித்ரா அமீன் அரைசதம் கடந்தார்.
பின்னர் 54 ரன்களைச் சேர்த்த கையோடு சித்ரா அமீன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து கேப்டன் ஃபாத்திமா சனா 15 ரன்களிலும், சித்ரா நவாஸ் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 191 ரன்களில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கரிஷ்மா ரம்ஹராக், ஹீலி மேத்யூஸ், அஃபி ஃபிளெட்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் கேப்டன் ஹீலி மேத்யூஸ் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸைதா ஜேம்ஸும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷெமைன் காம்பேல் 14 ரன்களிலும், ஜானிலியா கிளாஸ்கோ 18 ரன்களுக்கும், சினெல்லே ஹென்றி 14 ரன்களிலும், ஷபிகா கஜ்னபி 21 ரன்களிலும், ஸ்டெஃபானி டெய்லர் 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் அலியா அலீன் 22 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் கேப்டன் ஃபாத்திமா சனா 3 விக்கெட்டுகளையும், ரமீன் ஷமிம், நஷ்ரா சந்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.