இந்தியா வீக்னஸே இல்லாத அணியாக அசத்துகிறது - ஜோஷ் ஹசில்வுட்!

Updated: Fri, Nov 17 2023 19:41 IST
இந்தியா வீக்னஸே இல்லாத அணியாக அசத்துகிறது - ஜோஷ் ஹசில்வுட்! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி அஹ்மதாபாத் நகரில் நடைபெறுகிறது. இதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த அணிகளில் ஆஸ்திரேலியா ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று காலம் காலமாக ஐசிசி தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோற்கடித்ததைப் போல் இம்முறையும் இந்தியாவை வீழ்த்தி 6ஆவது கோப்பையை தங்களுடைய நாட்டுக்கு எடுத்துச் செல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது.

மறுபுறம் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தோல்விகளை மட்டுமே பார்த்து அவமானங்களை சந்தித்து வரும் இந்தியா இத்தொடரில் நியூசிலாந்து உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மட்டுமல்லாமல் கங்குலி தலைமையில் 2003இல் படுதோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு மொத்தமாக சேர்த்து இம்முறை பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் தோல்விகளை சந்திக்காத இந்தியா வீக்னெஸ் இல்லாத அணியாக அசத்துவதாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதே தொடரில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் வெறும் 200 ரன்களை சேசிங் செய்யும் போது தம்முடைய தரமான ஸ்விங் பந்துகளுக்கு தடுமாறி 2/3 என சரிந்தது போல் இந்திய அணியில் இப்போதும் சில வெடிப்பு போன்ற ஓட்டைகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது பற்றி பேசிய அவர், “உலகக்கோப்பைக்கு முன்பாக விளையாடிய ஒரு தொடரில் நாங்கள் 2 – 1 என்ற கணக்கில் தோற்றோம். ஆனால் அவர்களுக்கு எதிராக நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதனால் அவர்களுடைய அணியில் இருக்கும் அனைத்தும் எங்களுக்கு நன்றாக தெரியும். மிகவும் தரமான அணியாக செயல்படும் அவர்கள் இத்தொடரில் தோல்விகளை சந்திக்கவில்லை. 

அதனால் அவர்களிடம் உண்மையாக பெரிய அளவில் பலவீனம் இல்லை. எனவே ஞாயிற்றுக்கிழமை அவர்களை எதிர்கொள்ள காத்திருக்கிறோம். இருப்பினும் சென்னையில் சிறிய இலக்கை துரத்தும் போது அவர்களுடைய அணியில் நாங்கள் சில வெடிப்புகளை பார்த்தோம். அப்போட்டியில் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுத்ததற்கு நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை