பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதே வெற்றிக்கு காரணமாக அமைந்தது - சோஃபி டிவைன்!
நியூசிலாந்து மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இந்த தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது சூஸி பேட்ஸ் மற்றும் கேப்டன் சோஃபி டிவைன் ஆகியோர்து அரைசதங்களின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சோஃபி டிவைன் 79 ரன்களையும், சூஸி பேட்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் நட்சத்திர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் ராதா யாதவ் 48 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கானைகள் சோபிக்க தவறினர். இதனால் இந்திய அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் சோஃபி டிவைன் மற்றும் லியா தஹுஹு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, ஒருநாள் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன், “இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றது மகிழ்ச்சி. நாங்கள் நீண்ட காலமாக நல்ல கிரிக்கெட்டை விளையாடுவது பற்றி ஆலோசித்து வருகிறோம். அதற்கேற்ற வகையில் களத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்ததன் காரணமாக இந்த போட்டியில் எங்களால் வெற்றிபெற முடிந்தது.
Also Read: Funding To Save Test Cricket
மேலும் இப்போட்டியில் சூஸி பேட்ஸ், மேடி கிரீன் உள்ளிட்ட வீராங்கனைகள் விளையாடிய விதம், மற்றும் தொடக்கத்தில் இருந்தே நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததன் காரணமாக எங்கால் இந்த ஸ்கோரை எட்டமுடிந்தது. அமெலியா கெர் போன்ற் தரம் வாய்ந்த ஒருவரை நீங்கள் இழக்கும்போது அது எப்போதும் கடினமாக இருக்கும். நீங்கள் வழக்கமான விக்கெட்டுகளை எடுக்கும்போது, உங்களுக்குக் கிடைக்கும் மற்ற பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை வைக்க உதவுகிறது. அந்தவகையில் இந்த போட்டியில் பந்துவீச்சாளர்களும் தங்கள் வேலையை சரியாக செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.