அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. அதன்படி பார்படாஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப்பிறகு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவெற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நேரில் அழைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதன்பின் மும்பை வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
இதனையடுத்து அடுத்ததாக இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர்களுக்காக தயாராகி வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதால், இந்திய அணி பாகிஸ்தானிற்கு பயணிக்குமா என்ற கேள்விகளும் அதிகரித்துள்ளது. அதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியளில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருவதன் காரணமாக நிச்சயமாக இம்முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், ரோஹித் சர்மா தலைமையில் அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் இந்திய அணி கோப்பையை வெல்லும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்த வரலாற்று வெற்றிக்காக இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த வெற்றியை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். கடந்த ஓராண்டில் இது எங்களின் மூன்றாவது இறுதிப் போட்டி. அந்தவகையில் நாங்கள் ஜூன் 2023 இல் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தோம்.
அதன்பின் 2023 ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவுசெய்த நிலையிலும், இறுதிப்போட்டியிலும் நாங்கள் தோல்வியடைந்தோம். அப்போது நான் 2024ஆம் ஆண்டு ஜூனில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் கோப்பையை வெல்வோம், இந்தியாவின் கொடியை உயர்த்துவோம் என்று ராஜ்கோட்டில் கூறியிருந்தேன், தற்போது அதனை எங்கள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சரியாகச் செய்தார்.
அதன் காரணமாக எதிர்வரவுள்ள 2025ஆம் ஆண்டில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றும் என உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நீடிப்பார் என்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிசெய்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.