WI vs ENG, 1st ODI: லூயிஸ், மோட்டி அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடி விண்டீஸ் அபார வெற்றி!
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையடிவருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நேற்று (அக்டோபர் 31) ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் வில் ஜேக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து வில் ஜேக்ஸும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோர்டன் காக்ஸ் 17 ரன்களுக்கும், ஜேக்கப் பெத்தெல் 27 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணி 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் லியாம் லிவிங்ஸ்டோன் - சாம் கரண் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டோன் 48 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து சாம் கரண் 37 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் இங்கிலாந்து அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - எவின் லூயிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 15ஆவது ஓவரின் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பாட்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 35 ஓவர்களில் 157 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதத்தை நெருங்கிய எவின் லூயிஸ் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 94 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த கேசி கார்டி 18, கேப்டன் ஷாய் ஹோப் 6 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. இப்போட்டியில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய குடகேஷ் மோட்டி ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.