வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று (ஆகஸ்ட் 28) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

Advertisement

இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் முதல் நான்கு ஓவர்கள் முடிந்த நிலையில், மழை குறுக்கிட்டத்தன் காரணமாக இப்போட்டியானது தடைபட்டது. பின்னர் மழை தொடர்ந்து நீடித்ததன் காரணமாக இப்போட்டியானது 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக மீண்டும் தொடங்கியது. அதன்படி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரீஸா ஹென்றிக்ஸ் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரமும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 20 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 40 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரொமாரியோ ஷெஃபெர்ட் 2 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன், மேத்யூ ஃபோர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். மேற்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 13 ஓவர்களில் 116 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட்  இண்டீஸ் அணிக்கு அலிக் அதானாஸ் - ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் அலிக் அதானாஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஹோப்புடன் இணைந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

இருவரும் இணைந்து சிக்ஸர்களை பறக்கவிட, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியும் எளிதானது. பின்னர் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை இழந்தார். ஆனால் அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையரும் பவுண்டரிகளை பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது.  அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாய் ஹோப் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 42 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்களையும் சேர்த்து அசத்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 9.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், தென் ஆப்பிரிக்காவையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட்டும், இத்தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஷாய் ஹோப் தொடர் நாயகன் விருதையும் வென்றனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News