ரோவ்மன் பாவெல், ஜெய்டன் சீல்ஸ் அசத்தல்; வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வ்ருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதனாஸ் மற்றும் பிராண்டன் கிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அலிக் அதனாஸ் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 33 ரன்களை எடுத்த கையோடு பிராண்டன் கிங்கும் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டும் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஷாய் ஹோப் - ரோவ்மன் பாவெல் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாய் ஹோப் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 46 ரன்களையும், ரோவ்மன் பாவெல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 44 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும், ரிஷாத் ஹொசைன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். அதன்படி, சைஃப் ஹசன் 8 ரன்னிலும், தன்ஸித் ஹசன் 15 ரன்னிலும், கேப்டன் லிட்டன் தாஸ் 5 ரன்னிலும், ஷமிம் ஹொசைன் ஒரு ரன்னிலும், நூருல் ஹசன் ஒரு ரன்னிலும், தாவ்ஹித் ஹிரிடோய் 28 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த தன்ஸிம் ஹசன் - நசும் அஹ்மத் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
Also Read: LIVE Cricket Score
இதில் தன்ஸிம் ஹசன் 33 ரன்களுக்கும், நசும் அஹ்மத் 20 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க, வங்கதேச அணி 19.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ரோவ்மன் பாவெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.