ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நேற்று பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மார்னஸ் லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் ஆகியோர் சதமடித்து அசத்தியதன் மூலம், ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை மார்னஸ் லபுசாக்னே 120 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 114 ரன்களுடனும் தொடங்கினர். இன்றைய ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய லபுசாக்னே - டிராவிஸ் ஹெட் இணை தொடர்ந்து ஸ்கோரை உயர்த்தினர்
இதனால் இப்போட்டியிலும் இரட்டைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுசாக்னே 163 ரன்கள் எடுத்த நிலையில், டெவான் தாமஸிடம் விக்கெட்டை இழந்தார். அதைத்தொடர்ந்து டிராவிஸ் ஹெட்டும் 175 ரன்களோடு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் வந்த காம்ரூன் க்ரீன் 9, மைக்கேல் நாசெர் 18, மிட்செல் ஸ்டார்க் 5 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 511 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப், டெவான் தாமஸ் தல 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரேய்க் பிராத்வையிட் 19 ரன்களிலும், ஷமாரா ப்ரூக்ஸ், ஜென்மைன் பிளாக்வுட் 3 ரன்களிலும், டெவான் தமாஸ் 19 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சந்தர்பால் - ஆண்டர்சன் பிலீப் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சந்தர்பால் 47 ரன்களிலும், ஆண்டர்சன் பிலீப் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் மைக்கேல் நாசர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.