ஐபிஎல் 2024 மினி ஏலம்: சிஎஸ்கேவில் இடம்பிடித்த இளம் வீரர்; யார் இந்த சமீர் ரிஸ்வி!

Updated: Tue, Dec 19 2023 19:49 IST
Image Source: Google

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2023 உலகக்கோப்பையில் அறிமுகத் தொடரிலேயே 523 ரன்கள் குவித்து மாபெரும் உலக சாதனை படைத்த நியூசிலாந்தை சேர்ந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்தராவை முதல் வீரராக 1.80 கோடிக்கு வாங்கியது.

அதை தொடர்ந்து 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகளிலும் சதமடித்து அபாரமாக செயல்பட்ட மற்றொரு நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்சேலை 14 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கிய சென்னை அணி, இந்தியாவைச் சேர்ந்த ஷர்தூள் தாக்கூரையும்வாங்கியது. இந்த நிலைமையில் சமீர் ரிஸ்வி எனும் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரரை 8.40 கோடி என்ற பெரிய தொகைக்கு சென்னை வாங்கியது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

ஏனெனில் வெறும் 20 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இதுவரை சர்வதேச அரங்கில் விளையாடாத போதிலும் சென்னை இவ்வளவு தொகைக்கு வாங்கியது ஏன் என்று ரசிகர்கள் வியப்படைந்தனர். உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அவர் 2022 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் 18 சிக்ஸர்களை அடித்து தம்முடைய திறமையை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக அந்த தொடரில் தாம் எதிர்கொண்ட ஒவ்வொரு 11 பந்துக்கும் 1 சிக்ஸர் அடித்து அதிரடியாக விளையாடிய அவர் 11 போட்டிகளில் 295 ரன்களை 134.70 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் 49.16 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். மேலும் 2023 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் 7 இன்னிங்ஸில் அவர் 227 ரன்கள் அடித்தார். அதை விட நடைபெற்று முடிந்த யூபி டி20 லீக் தொடரில் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 455 ரன்களை 188.80 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

மேலும் 23 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் இறுதிப் போட்டியில் 50 பந்துகளில் 84 ரன்கள் அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார். அத்தொடரில் 454 ரன்களை விளாசிய அவர் 37 சிக்சர்களையும் பறக்க விட்டு அசத்தினார். குறிப்பாக வருங்காலத்தில் லோயர் மிடில் ஆர்டரில் விளையாடி ஃபினிஷிங் செய்வதற்காக அவரை இந்த தொகை கொடுத்து சென்னை வாங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::