புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க போதிய அவகாசம் உள்ளது - பிசிசிஐ

Updated: Mon, Jan 17 2022 21:25 IST
Image Source: Google

பிசிசிஐ தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.  தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி முடிந்த அடுத்த நாளே யாரும் எதிர்பார்க்காத விதமாக விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

ஏற்கனவே அவர் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டும் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியிலிருந்தும் பிசிசிஐ அவரை நீக்கி இருந்தது. புதிய கேப்டனை தேர்வு செய்வது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், இந்திய தேர்வாளர்கள் புதிய கேப்டன் பற்றிய தகவலை விரைவில் கூறுவார்கள்,  தற்போது வரை யார் பெயரையும் அவர்கள் கூறவில்லை. 

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்தபிறகு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.  தற்போது ரோஹித் சர்மா டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  கோலிக்கு அடுத்து கேஎல் ராகுலுக்கு டெஸ்ட் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட உள்ளது என்று செய்திகள் வருகின்றன. 

ஆனால் தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிசிசிஐ தரப்பில் கூறியுள்ளனர்.  மேலும், புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க போதுமான கால அவகாசம் பிசிசிஐக்கு உள்ளது, தேர்வுக் குழு மற்றும் பிசிசிஐ-யின் மூத்த அதிகாரிகளின் இணைந்து இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏழு வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.  தற்போது, புதிய கேப்டனை தேர்ந்தெடுப்பது பிசிசிஐக்கு ஒரு மிகப் பெரும் சவாலாகவே உள்ளது.  காரணம், கேப்டனாக விராட் கோலி மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளார்.  

கடந்த பதினைந்து இருபது வருடங்களில் இந்திய அணி செய்யாத சாதனைகளை விராட் கோலி தலைமையில் இந்திய அணி சாதித்துள்ளது.  தோனியின் ஓய்வுக்குப் பிறகு கேப்டனாக பொறுப்பேற்ற கோலி மற்ற நாடுகளில் இந்திய அணி இதுவரை செய்யாத சாதனைகளை சாதித்து காட்டியுள்ளார். 

இந்திய அணியை ஐசிசி ரேங்கிங்கில் நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு சென்றார் கோலி.  அதுமட்டுமின்றி முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு நுழைந்தது இந்தியா.  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என இதுவரை இந்திய அணி வெற்றி பெறாத நாடுகளில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை