நம்பிக்கை இல்லை என்றால் 2 ஸ்பின்னர்களை ஏன் லெவனில் சேர்த்தீர்கள்? - ரவி சாஸ்திரி தாக்கு!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் 28 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிதீஷ் ரெட்டி 40 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணி தேர்வை முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் சாதாரணமாக இருந்தது. அவர்களிடம் சரியான திட்டமிடல் இல்லை. மேலும் இப்போட்டியில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை போதுமான அளவு பயன்படுத்தப்படவில்லை என்று தோன்றுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
ஜடேஜா பந்துவீச 40 ஓவர்கள் இடைவெளி விடப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் தனது முதல் ஓவரை வீச நீண்ட நேரம் ஆனது. அப்படியிருக்க இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை ஏன் பிளேயிங் லெவனில் விளையாட வைத்தீர்கள் என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை சுழற்பந்து வீச்சாளர்கள் மீது நம்பிக்கை இல்லையென்றால் அவர்களை ஏன் நீங்கள் பிளேயிங் லெவனில் தேர்வு செய்தீர்கள்?.மேலும் ரன்களை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தெரியவில்லை” என்று விமர்சித்துள்ளார்.