WI vs AUS, 1st T20I: ஆஸ்திரேலிய வெற்றியைத் தட்டிப்பறித்த விண்டிஸ் பந்துவீச்சாளர்கள்!

Updated: Sat, Jul 10 2021 17:58 IST
WI vs AUS, 1st T20I: West Indies Beat Australia In T20I Series Opener (Image Source: Google)

ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி செயிண்ட லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், சிம்மன்ஸ், ஹெட்மையர், பூரன் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதையடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் ரஸ்ஸல் 28 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரிகளை விளாசி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

இதன் மூலம் நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்தச்து.  ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் ஃபிஞ்ச் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 

இதில் மேத்யூ வேட் 33 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஜோஷ் பிலீப், ஹென்ரிக்ஸ், பென் மெக்டெர்மட் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் அரைசதம் கடந்த கையோடு விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த வீரர்களும் சரிவர விளையாடாமல் விக்கெட்டை இழந்ததால், 16 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

 

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஒபெட் மெக்காய் 4 விக்கெட்டுகளையும், ஹெய்டன் வால்ஷ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. மேலும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை