WI vs AUS, 4th T20I: மார்ஷ், ஸ்டார்க் அசத்தல்; விண்டீஸை வீழ்த்தியது ஆஸி.,

Updated: Thu, Jul 15 2021 10:20 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று அதிகாலை செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

அந்த அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் 5 ரன்களில் ஆட்டமிழக்க, பின் கேப்டன் ஃபிஞ்ச் - மிட்செல் மார்ஷ் இணை ஜோடி சேர்ந்து வானவேடிக்கை காட்டியது. தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோர் 200 தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. 

பின் 53 ரன்களில் ஃபிஞ்ச் ஆட்டமிழக்க, 75 ரன்களில் மிட்செல் மார்ஷும் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொதப்பியதால், 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகப்பட்சமாக மிட்செல் மார்ஷ் 75 ரன்களையும், ஆரோன் ஃபிஞ்ச் 53 ரன்களையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லூயிஸ் - லிண்டெல் சிம்மன்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதனால் ஆறு ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி 75 ரன்களை குவித்திருந்தது. 

பின் 31 ரன்னில் சிம்மன்ஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த கிறிஸ் கெயில் ஒரு ரன்னிலும், ஃபிளட்செர் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினர். மறுமுனையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த எவின் லூயிஸும் 72 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் கடைசி ஓவரை வீச ரஸ்ஸல் அதனை எதிர்கொண்டார். ஆனால் அந்த ஓவரில் அவரால் 6 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. 

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை