WI vs IND, 3rd T20I: 360 டிகிரியில் மிரட்டிய சூர்யா; இந்தியா அசத்தல் வெற்றி!

Updated: Tue, Aug 08 2023 23:22 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி கயானாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.  அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.

பின் 25 ரன்கள் எடுத்திருந்த கைல் மேயர்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி காட்டிய ஜான்சன் சார்லஸும் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பந்துவீச்சாளர்களை அச்சுருத்தினார்.

அதன்பின் 20 ரன்களுக்கு பூரன் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிராண்டன் கிங் 42 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.  இறுதியில் கேப்டன் ரோவ்மன் பாவெல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு இம்முறையும் சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் ஒரு ரன்னிலும், ஷுப்மன் கில் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதைனையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இணை ஜோடி சேர்ந்தது. 

இதில் கடந்த இரண்டு போட்டிகளில் சொதப்பிய சூர்யகுமார் யாதவ் இப்போட்டியில் தனது வழக்கமான 360 டிகிரி ஷாட்களை விளாசி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை சோதித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் சதத்தை நெருங்கிய அவர் 44 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 83 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதேசமயம் மறுபக்கம் வழக்கம்பொல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 49 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியை உறுதிசெய்ய, கேப்டன் ஹர்திக் பாண்டியா சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்மூலம் இந்திய அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை