WI vs SA, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Mon, Aug 26 2024 08:36 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதானாஸ் - ஷாய் ஹோப் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலிக் அதானாஸ் 28 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஷாய் ஹோப்பும் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் - ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் ரோவ்மன் பாவெல் 35 ரன்களுக்கும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 29 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்தாலும் 179 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லிசாத் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும், பேட்ரிக் க்ரூகர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

அதன்பின் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீஸா ஹென்ரிக்ஸ் - ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியாக தொடங்கினர். இதில் ரியான் ரிக்கெல்டன் 20 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரீஸா ஹென்றிஸுக்ம் 44 ரன்களில் நடையைக் கட்டி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 19 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 28 ரன்களுக்கும், ரஸ்ஸி வேண்டர் டுசென் 17 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதன்பின் களமிறங்கிய டோனவன் ஃபெரீரா, பேட்ரிக் க்ரூகர், ஃபோர்டூன், லிஸாத் வில்லியம்ஸ், ஓட்னீல் பார்ட்மேன் என அனைவரும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களுக்கு நடையைக் கட்ட, தென் ஆப்பிரிக்க அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஷமார் ஜோசப், ரொமாரியோ ஷெஃபெர்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை