WI vs SA, 2nd Test: 160 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; தடுமாறும் விண்டீஸ்!

Updated: Fri, Aug 16 2024 12:14 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று (ஆகஸ்ட் 15) கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

இப்போட்டிகான தென் ஆப்பிரிக்க அணியின் நந்த்ரே பர்கர், டேன் பீட் ஆகியோரும், வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசபும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் டோனி டி ஸோர்ஸி ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி டி ஸோர்ஸி ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஐடன் மார்க்ரம் 14 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய டேவிட் பெட்டிங்ஹம் 28 ரன்களிலும், வியான் முல்டர், கேசவ் மஹாராஜ் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றியும், கைல் வெர்ரைன் 21 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் இணைந்த டேன் பீட் மற்றும் நந்த்ரே பர்கர் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

பின்னர் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நந்த்ரே பர்கரும் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேன் பீட் 38 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 160 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமார் ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்கள் மைக்கேல் லூயிஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் பிராத்வைட் 3 ரன்களிலும், அலிக் அதானாஸ் ஒரு ரன்னிலும், கவேம் ஹாட்ஜ் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேசி கார்டி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோஷுவா டா சில்வா, குடகேஷ் மோட்டி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 97 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 63 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை