இளம் வீரர்களை பரிசோதித்து பார்ப்பதற்கு இதுதான் எங்களுக்கு கடைசி வாய்ப்பு - ராகுல் டிராவிட்!
உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இதற்கு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை மொத்தமாக மாற்றியதே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக உலகக்கோப்பை நெருங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் தோல்வி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், “இளம் வீரர்களை பரிசோதித்து பார்ப்பதற்கு இதுதான் எங்களுக்கு கடைசி வாய்ப்பு. ஆசியக் கோப்பைக்கு முன்பாக கிடைக்கும் சில போட்டிகளை இதற்காக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம். என்சிஏவில் ஏராளமான வீரர்கள் காயத்தில் இருந்து குணமடைந்து வருவதால், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை சுற்றி ஆடுவோரிடம் மனஉறுதியும், நிச்சயமற்ற உணர்வும் உள்ளது.
இதனால் அவர்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவார்கள். மற்றவர்களின் கருத்துகளை பற்றி எந்த கவலையும் இல்லை. நமது நாட்டில் உள்ள திறமையான வீரர்களை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்வது அவர்களின் கைகளில் தான் உள்ளது. நிச்சயம் இன்றைய போட்டி மோசமாக தான் அமைந்தது. அதேபோல் இந்த பிட்சில் பேட்டிங் செய்வது எளிதல்ல.
ஒருவேளை 230 முதல் 240 ரன்களை வரை குவித்திருந்தால், நிச்சயம் சவாலாக இலக்காக அமைந்திருக்கும். ஆனால் கொத்து கொத்தாக விக்கெட்டை பறிகொடுத்தது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இந்திய அணிக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது. ஆனால் அதனை பயன்படுத்த தவறிவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.