பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது - ராகுல் டிராவிட்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையான இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனல் சுற்றுக்கும் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் இந்தியா இறுதிக்கு தகுதி பெறுவதற்கு தயாராகி வருகிறது.
அதற்கு முன்பாக கத்துக்குட்டியான நெதர்லாந்துக்கு எதிராக நவம்பர் 12ஆம் தேதி பெங்களூரு நகரில் நடைபெறும் சம்பிரதாய கடைசி லீக் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. ஏனெனில் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் போன்ற அணிகளை தோற்கடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றாலும் எஞ்சிய போட்டிகளில் தோல்விகளை பதிவு செய்த நெதர்லாந்து லீக் சுற்றுடன் ஏற்கனவே வெளியேறி விட்டது.
அதனால் சொந்த மண்ணில் மிகவும் வலுவான அணியாக திகழும் இந்தியா கண்டிப்பாக நெதர்லாந்தை தோற்கடித்து ரசிகர்களுக்கு தீபாவளி பரிசளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்ததாக நாக் அவுட் போட்டி நடைபெற உள்ளதால் நெதர்லாந்து போன்ற கத்துக்குட்டிக்கு எதிராக நடைபெறும் இப்போட்டியில் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
இந்நிலையில் கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய இந்திய அணியினர் 6 நாட்கள் போதுமான ஓய்வெடுத்து விட்டதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். அதனால் இப்போட்டியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது என்பதை மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கடந்த போட்டிக்கு பின் 6 முழுமையான நாட்கள் எங்களுக்கு கிடைத்தது. அதில் நாங்கள் நன்றாக ஓய்வெடுத்தோம். குறிப்பாக ஒரு லீக் மற்றும் அரையிறுதிக்கு முன்பாக 6 நாட்கள் ஓய்வு கிடைத்தது எங்களுடைய வீரர்களுக்கு நல்ல புத்துணர்ச்சியையும் வடிவத்தையும் கொடுத்துள்ளது. இதை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும். ஏனெனில் நாங்கள் தொடரின் கடைசி பகுதிக்கு வந்து விட்டோம். எனவே தற்போது விளையாடும் 11 பேர் அணியில் யார் விளையாட வேண்டும் என்பதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.குறிப்பாக அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு முன்பாக நாங்கள் உடல் அளவிலும் மனதளவிலும் சிறந்த இடத்தில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்நிலையில் இதுவரை பெரிய அளவில் மாற்றங்களை செய்யாமல் சிறப்பாக விளையாடி வருவதாலேயே தொடர்ச்சியாக 8 போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. அதனால் நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக எவ்விதமான மாற்றத்தையும் செய்யாமல் இப்போட்டியிலும் இந்தியா அதே பிளேயிங் லெவலுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.