என்னால் நடக்க முடியாது என்ற நிலை வரும் வரை நான் ஐபிஎல் விளையாடுவேன் - கிளென் மேக்ஸ்வெல்! 

Updated: Wed, Dec 06 2023 12:46 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த முறை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடைய ஆட்டத்தில் கவனிக்கத்தக்க போட்டியாக இருந்தது ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் தான்.

தோல்வியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலிய அணியை தனி ஒரு ஆளாக இருந்து மீட்டார். அவரது ஆட்டம் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறச்செய்தார். அதன்படி, ஆறாவது வீரராக அந்த அணியில் களமிறங்கிய இவர் 128 பந்துகளில் 21 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் என மொத்தம் 201 ரன்களை குவித்தார். 

இதனால், இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்கள் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் மேக்ஸ்வெல்லை பாராட்டினார்கள். ரசிகர்களும் அவரை கொண்டாடினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சிறப்பான ஆட்டம் அது. முன்னதாக, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ( பஞ்சாப் கிங்ஸ்), டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ளார். 

இதனிடையே 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அது குறித்து  கிளென் மேக்ஸ்வெல் பேசியுள்ளார். அதில், “ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எனது சொந்த வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஐபிஎல் தொடரின் போது சந்திக்கும் பயிற்சியாளர்கள், அங்கு சந்திக்கும் வீரர்கள் உள்ளிட்ட அனுபவங்கள் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அதேபோல் ஆர்சிபி அணியில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலியுடன் 2 மாதங்கள் இணைந்து பேசுவது, ஒன்றாக போட்டிகளை பார்ப்பது, ஆலோசிப்பது உள்ளிட்ட அனுபவங்கள் மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. இதுபோன்ற அனுபவங்களை எந்த கிரிக்கெட் வீரரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். என்னால் நடக்க முடியாது என்ற நிலை வரும் வரை நான் ஐபிஎல் விளையாடுவேன். அதேபோல் அடுத்ததாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் நடக்கவுள்ளது.

வெஸ்ட் இண்டீஸில் நடப்பதால், அதேபோன்ற சூழலான இந்திய மண்ணில் ஐபிஎல் தொடர் நடக்கவுள்ளது. இதனால் ஏராளமான ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஐபிஎல் விளையாட ஆர்வமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அங்கு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதேபோல் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த உடனே, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை