மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இத்தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. அந்தவகையில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்து இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைக்ள் மையா பௌச்சர் 9 ரன்களுக்கும், டாமி பியூமண்ட் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் ஹீதர் நைட் மற்றும் நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹீத் நைட் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் நாட் ஸ்கைவர் பிரண்டும் 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இணைந்த டேனியல் வைட் ஹாட்ஜ் மற்றும் ஏமி ஜோன்ஸ் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில் டேனியல் வைட் 38 ரன்களுக்கும், ஏமி ஜோன்ஸ் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய மகளிர் அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அஸ்திரேலிய அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அதன்படி அணியின் தொடக்க வீராங்கனை போப் லிட்ச்ஃபீல்ட் 4 ரன்களுக்கும், அடுத்து வந்த எல்லிஸ் பெர்ரி 14 ரன்களுக்கும் என விக்கெட்டாஇ இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் அணியின் கேப்டன் அலிசா ஹீலி சிறப்பாக செயல்பட்டு தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய பெத் மூனி 28, அனபெல் சதர்லேண்ட் 10 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
அதனைத்தொடர்ந்து 70 ரன்கள் எடுத்த நிலையில் அலிசா ஹீலியும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்லே கார்ட்னர் 42 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 38.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிபெற செய்த ஆஷ்லே கார்ட்னர் ஆட்டநாயகி விருதை வென்றார்.